அண்ணா பல்கலைக்கழகத்தின் உடை கட்டுப்பாடு
பெண்ணுரிமை என்றால் என்னவென்றே விளங்கிக் கொள்ள சக்தியில்லாதவர்கள் வழக்கம் போல தங்கள் வார்த்தை ஜாலங்களால் துணைவேந்தர் உட்பட அந்தக் கருத்தில் இருப்பவர்களை சாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய கருத்துக்கு இஸ்லாமிய சாயம் கூட பூசப்பட்டது.
மத நம்பிக்கையை ஒருபக்கம் ஒதுக்கி விட்டு இந்த பிரச்சனையை யோசிப்போம். ஒரு பல்கலை கழகத்தின் துணைவேந்தர் 'பெண்கள் ஆடை விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை ஏன் வெளியிட வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
உயர்கல்வியும் அது போதிக்கப்படும் வளாகமும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் - துணிவையும் - சிந்தனைத் தெளிவையும் ஏற்படுத்தும் இடமாகும். அத்தகைய இடத்திலிருந்து மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் ஒரு கல்வியாளர் இத்தகைய கருத்தை முன் வைக்கிறார் என்றால் கல்வி ஏற்படுத்த வேண்டிய மாற்றத்திற்கும் மாணவியர் உடுத்தும் உடைக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகின்றது. சில மாணவியர் தங்கள் தன்நம்பிக்கைக்கு உடையையே அடையாளமாக்கும் போக்கை கையாள்கிறார்கள். இந்த போக்கை அவர்கள் தங்கள் கல்வி மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பெறுவதை விட 'அழகித் தேர்வு' என்ற பாலியல் நுகர்வு இடங்களிலிருந்தே பெறுகிறார்கள்.
உடம்பின் முக்கால் பாகம் தெரியக் கூடிய அளவிற்கு துண்டு உடையுடன் அழகிப்போட்டிக்கான மேடைகளில் வளைந்து, நெளிந்து நடந்து தங்கள் சதை பிடிப்புகளுக்கு சர்ட்டிஃபிகேட் வாங்கும் சில வியாபார பெண்கள் 'வெற்றிவாகை? சூடியவுடன் முதலில் பேசுவது தனது 'தன்னம்பிக்கை'யைப் பற்றிதான். 'நாங்கள் 'சாதிக்க முடியும்' என்ற தன்னம்பிக்கை மூலதனமாகக் கொண்டே வெற்றிப் பெற்றுள்ளோம்' என்று வாய் கூசாமல் கூறுவார்கள். அந்த செக்ஸ் வியாபார குறியீடுகளின் உடம்பில் பார்வையை மேயவிடும் வக்கிரம் மிக்க நடுவர் கூட்டம் இந்த தன்னம்பிக்கையை ஆஹா.. ஓஹோ.. என்று பாராட்டி மார்க் போடும்.
சென்சார் தடைகளின்றி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் இத்தகைய போட்டிகளும், கருத்துக்களும் கல்லூரி மாணவிகளை வெகுவாக பாதிக்கின்றது. அதனுடைய பிரதிபளிப்புதான் இத்தகைய ஆடைக் குறைப்பு கலாச்சாரமாகும்.
கல்வி முறைக்கும், தற்போது ஏற்பட்டு வரும் கலாச்சார மாற்றங்களுக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு இருப்பதை தெளிவாக உணரும் தருணம் இது.
கல்வி ஏற்படுத்த வேண்டிய சமூக மாற்றங்களை விட இத்தகைய மீடியாக்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்ணிய மாற்றங்களே இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவாலாக இருந்துக் கொண்டிருக்கிறது.
குறை உடைகளுடன் காட்சியளிக்கும் மாணவிகளிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள் சில உண்டு.இந்த குறை உடைகளின் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?
தேவையான அளவு உடை உடுத்தி இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் பெரும் சவாலாக அமைகிறார்கள் என்றால் இந்த குறை உடைகளால் ஆணை தவறான வழிகளுக்கு கூடுதலாக தூண்டுவதில் உங்களுக்கு என்ன வெற்றி கிடைக்கப்போகிறது? தொடை - மார்புப் பகுதிகள் - முதுகு என்று முக்கியமாக மறைக்க வேண்டிய பல பகுதிகளை திறந்து பள்ளிக்கு செல்கிறீர்களே, உடன் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளி, கல்லூரி மாணவர்கள் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கும் போது எப்படி கல்வியில் முன்னேறுவார்கள்? ரேகிங், ரேப்பிங், ஈவ்டீஸிங் போன்ற பெண் விரோத கொடுமைகள் நடப்பதற்கு பாலியலைத் தூண்டும் உங்கள் உடைகள் முக்கிய காரணமாவதை உங்கள் அறிவு ஒத்துக்கொள்ள மறுப்பதேன்?
'அரை குறை உடைகள் தான் சுதந்திரம், இப்படி உடை உடுத்தினால் தான் சாதிக்க முடியும்' என்று நீங்கள் கருதினால் முழு அளவு உடை உடுத்தி சாதிக்கும் பெண்களையும், குறை உடைகளை அறவே உடுத்தாமல் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் ஆண்களையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது? நீங்கள் திறந்து வைத்திருக்கும் பகுதிகள் கவர்ச்சிப் பகுதிகள் அல்ல என்று சொல்ல வருகிறீர்களா..?
நீங்கள் கற்கும் கல்வியில் எந்தப் பாடம் இத்தகைய உடைகளை 'சுதந்திரம்' என்று கூறி உங்களை ஊக்குவிக்கிறது?. இந்தக் கேள்விகளுக்கு 'சுதந்திரம்' பேசும் மாணவிகள் பதில் சொல்ல வேண்டும்.
துணைவேந்தரின் அறிவிப்புப் பற்றியும் மாணவிகள் அணியும் இத்தகைய உடைகள் பற்றியும் சில பெண்களின் கருத்தை 'தினமணி'யிலிருந்து கொடுக்கிறோம்.
கவர்ச்சி உடையணிந்து கலாசாரத்தைக் கெடுக்கும் கல்லூரி மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியே! பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் மாற்றுவது மாடர்ன் டிரஸ். ஆடை குறைப்போடு கூடிய மாடர்ன் டிரஸ், வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தை சீர்கெடச் செய்துவிடும். - கவிஞர் அருணா ராஜேந்திரன், கூத்தூர்.
மாடர்ன் டிரஸ் அணிவது நாகரிகமாய் இருந்தாலும் தமிழருடைய பண்பாடு கெடுகிறது. இது கலாசாரத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். இதைத் தடை செய்வது ஈவ்-டீஸிங்கை தடுக்கும். ஆகவே மாடர்ன் டிரஸ் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதாகும். - கே.பிரேமா வி.கே.புரம்
மாடர்ன் டிரஸ் அணிவது, கல்லூரி இளைஞர்களிடையே ஈவ்-டீஸிங் செய்ய தூண்டுகோலாக அமையும். புடவை கட்டிக்கொண்டு சென்றால் அவ்வளவாக ஈவ்-டீஸிங் இருப்பதில்லை. எனவே கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ்க்கு தடை விதித்தது சரியே. - சி.எஸ். பத்மாவதி. குடியாத்தம்
ஆடைகள் என்பது மனித சமுதாயத்துக்கு மதிப்பு, மரியாதை தரவேண்டும். எனவே கண்ணியமாக உடை உடுத்துவது அவசியமாகும். ஆடை அணிய வேண்டிய முறை குறித்து குர்ஆனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாணவிகளுக்கும் பொருந்தும். - சல்மா பேகம், சிங்கபெருமாள் கோவில்
மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் அருவருக்கத்தக்க உடைகள் அணிவதைத் தடை செய்ய வேண்டும். மாணவிகளுக்கு தடை விதித்திருப்பதைப் போல, மாணவர்களும் அநாகரிகமாக உடை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும். இதைச் செயல்படுத்துவது பெற்றோர்களின் முதல் கடமை. - யூசிமா, தென்கரை பெரியகுளம்
கல்லூரி மாணவிகள் மாடர்ன் டிரஸ் அணிவது தவறல்ல; மாடர்ன் டிரஸ் என்ற பெயரில், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அரைகுறை ஆடைகளுடன் வளைய வருவதுதான் தவறு. ஆடை என்பது பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர்த்துவது. அதற்காக ஒன்பது கஜ புடவைகளை சுற்றிக்கொண்டு வர வேண்டியதில்லை. அணியும் ஆடை ஒருவருக்கு கம்பீரத்தையும், மனதில் மரியாதையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். - கு.பெருந்தேவி, சென்னை
உடலை மறைப்பதற்காகத்தான் உடை உடுத்துகிறோம். உடல் வெளியில் தெரியும்படி பெண்கள் உடை அணிவதால், ஆண்கள் தவறு செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது. உள்ளத்திலிருந்து வரவேண்டிய காதல், உடல் கவர்ச்சியிலிருந்து வருகிறது. முன்பெல்லாம் தவறு ஏற்படுவது அபூர்வமாக இருந்தது. இப்போது நடக்கும் தவறுகளுக்கு பெண்கள் அணியும் உடையே முக்கிய காரணமாக உள்ளது. சேலை கட்டுவதுதான் சிறந்தது, பண்பாடும் கூட. - வி.வேலாமுத முத்தம்மாள், காந்தி சேவா சங்கம், சத்திரப்பட்டி
கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதுதான். மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் ஆபாசமாக உடை அணிகின்றனர். இந்த உடையுடனே பொது இடங்களுக்கும் வருகின்றனர். ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு இது சமம். ஸ்லீவ்லெஸ் மேலாடையும், டைட் ஜீன்ஸம் ஆண்களை படுத்துவது நிஜம். - விஜயஸ்ரீ இராஜேந்திரன், மொரட்டுப்பாளையம்
நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. கல்லூரிக்குச் செல்வது படிப்பதற்காகத்தான். ஆடை அலங்காரத்தை ரசிப்பதற்காக அல்ல. சினிமா மோகத்தால், திசை மாறி நடைமுறைக்கு ஒத்துவராத ஆடைகளை அணிய தடை விதிப்பது தவறில்லை. பள்ளிகள் போன்று சீருடை கூட அறிமுகப்படுத்தலாம். நமது கலாசாரத்தை கட்டிக்காக்க இது உதவும். - ச.ஜெயஸ்ரீ, நங்கநல்லூர்
உடைக்கட்டுப்பாட்டை வரவேற்க்கும் மாணவர்களும், பெற்றோரும்
நன்றி: இதுதான்இஸ்லாம்.காம்