18 April 2009

துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில் புற்று நோய் இரசாயனங்கள்!

துபையில் விற்பனையாகும் ஹிஜாப்கள் (கேன்ஸர்) புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது UAE யின் கல்ஃப் நியூஸ் செய்தியில் வெளியாகியுள்ளது.


இஸ்லாமிய உடையான ஹிஜாப் (Abayas and Shailahs) முஸ்லிம் பெண்கள் பரவலாக அணியக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் துபையின் மத்திய ஆய்வுக்கூடமான (DCL) ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இதில் ஹிஜாப் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் துணியில் நிறத்தினைத் தருவதற்காக பயன்படுத்தப் படும் இரசாயனப் பொருட்களில் கார்ஸினோஜென்ஸ் (carcinogens) என்ற நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயனம் கலக்கப் பட்டிருப்பதும் அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக உலோகக் கலவைகள் இவ்வகை நெசவில் பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


DCL இல் பணிபுரியும் ஸோஃபியா காஸிம் என்ற பெண் ஆய்வாளர் கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில் இந்த திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வினைத் தொடர்ந்து துபையில் உள்ள பெரும்பாலான ஹிஜாப் நிறுவனங்கள் தயாரிக்கும் உடைகள் கார்ஸினோஜென்ஸ் தனிமங்கள் உள்ளனவா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றன. இத்தகைய ஹிஜாபை அணிவதால் உடலில் ஏற்படும் இராசயப் மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகளை ஆய்வு செய்தபின் இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.


இச் செய்தி கண்டு ஹிஜாப் அணியும் பெண்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது DCL. சந்தையில் விற்கும் அனைத்து ஹிஜாப்களிலும் இத்தகைய இரசாயனங்கள் இல்லை என்றும் பரிசோதனையில் சிக்கிய நிறுவனங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் உடனடியாக அகற்றப் பட்டுள்ளது என்றும் DCL தெளிவுபடுத்தியுள்ளது.


புற்றுநோயாளிகளுக்கான சங்கத்தில் (President of the Friends of Cancer Patients Society) முக்கியப் பொறுப்பினை வகிக்கும் டாக்டர் ஸா-ஸன் அல் மஹ்தி, இவ்விஷயத்தில் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவெனில் நாம் எத்தகைய உணவை உண்ண வேண்டும், எத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புகை பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும் என்று தினமும் அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் எத்தகைய உடையை அணியவேண்டும் என்பதை மறந்து விட்டோம் என்றார்.


இத்தகைய ஹிஜாபினைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது இன்னும் வெளியாக வில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் துணிகளில் பயன்படுத்தும் இத்தகைய இரசாயனப் பொருட்கள் மீதான தனிச் சட்டம் ஏதுமில்லாததால் இதற்கான உடனடி தீர்வை அறிவிக்க அரசினால் இயலவில்லை என்றார் துபை ஹாஸ்பிடல் நிறுவனத்தில் oncology துறைத் தலைவரான டாக்டர் ஃபரீத் கலீஃபா.


செயற்கை நிறமிகள் ஏற்படுத்தும் ஆபத்து என்ன?
நெசவின் போது பயன்படுத்தப்படும் சில செயற்கை நிறமிகள் ஆண் விதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்று நோய்களையும் மற்றும் சில நிறமிகள் பித்தப்பை மற்றும் சீறுநீரகப் பை போன்றவற்றில் புற்று நோயை உருவாக்கவல்லவை என்று அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

நெசவுப் பொருட்களில் சேர்க்கும் நிறமிகளிலும் இராசயப் பொருட்களிலும் உள்ள carcinogenic ஆபத்துகளைப் பற்றி வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WHO) பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை:

Direct Blue 6, Direct Black 38 மற்றும் Direct Brown 95 போன்ற பென்சீன் (benzidine) ஐ மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப் படும் நிறமிகள் அனைத்துமே ஆபத்தானவை ஆகும். முக்கியமான விஷயம் என்னவெனில் இவை எல்லாம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்ட ஒன்றாகும். WHO வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறமிகள் மற்றும் அவற்றின் குணாதிசியங்கள் இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


carcinogens என்ற நச்சுப் பொருள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் விழிப்புணர்வு எந்த அளவிற்கு உள்ளது இவற்றைக் கண்டுபிடித்தலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் என்ன? என்பதே எஞ்சி நிற்கும் கேள்வியாக உள்ளது.

12 March 2009

நீங்கள் ஏன் ஹிஜாப் அணிகிறீர்கள்? (ஆங்கிலம்)



நன்றி: Muxim.TV

13 February 2009

எது ஹிஜாப்? - அறியாமைகள் பற்றிய ஸ்லைட்ஷோ (ஆங்கிலம்)

HIJAAB

01 October 2008

ஹிஜாபுக்குத் தடை விதிக்கிறது மும்பை மகளிர் கல்லூரி!

மத்திய மும்பையின் மாதுங்கா பகுதியில் உள்ள மானிபென் ஷா பெண்கள் கல்லூரியில் ஹிஜாபுடன் கல்லூரிக்கு வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்க இன்று முதல் (01-10-2008) அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப் பட்டுள்ளது.

மகளிர் கல்லூரியான மானிபென் ஷாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பயின்று வரும் சூழலில் இந்த உத்தரவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல வருடங்களாக ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்வி பயில்வதை அனுமதித்த இக்கல்லூரி நிர்வாகத்தினை நோக்கி மக்களிடம் இருந்து கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு விடையளிக்கும் முகமாக "ஹிஜாப் அணிந்து சில விஷமிகள் சென்றவாரம் கல்லூரிக்குள் நுழைந்ததாகவும், மாணவிகளின் பாதுகாப்பை முன்னிட்டு ஹிஜாப் தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டதாகவும்" கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

கல்லூரியின் முதல்வர் சுமன் ஜெயின் அவர்களின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று பெற்றோர்கள் ஒருமுகமாகத் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்களில் சிலர் கருத்துக் கூறுகையில் "உடல் பாகங்களை மூடி மறைக்க அணியும் ஹிஜாப், முகத்தினையும் சேர்த்து மறைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை வலியுறுத்தவில்லை. ஹிஜாப் உடையினை அணியும் ஒரு பெண் முகத்தினைத் திறந்து கல்லூரிக்கு வந்தால் விஷமிகள் வந்தார்கள் என்ற பேச்சிற்கே இடமில்லையே? எனவே கல்லூரி நிர்வாகம் மீண்டும் ஹிஜாப் தடையுத்தரவை நீக்கி, முகம் தெரியும்படியாக உடையணியும்படி உத்தரவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஹிஜாபினைத் தடுக்கும் உள்நோக்கத்தில் விஷமிகள் ஹிஜாப் அணிந்து வருவதாக கதையளக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும் என்று பரவலாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

23 July 2008

ஹிஜாப் அணிந்தால் வேலை இல்லையா? எதிர்த்துத் தொடுத்த வழக்கில் வெற்றி!

சகோதரி புஷ்ரா நோவா

ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்த ஒரே காரணத்தினால், பத்தொன்பது வயதுள்ள புஷ்ரா நோவா என்ற முஸ்லிம் பெண், தான் பணிபுரியும் ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஸாரா டெஸ்ரோஸிர்ஸ் என்பவரால் கடந்த மே-2008 இல் பணி நீக்கம் நீக்கப்பட்டுள்ளார்.


"பெண் வாடிக்கையாளர்கள் விதவிதமான அலங்காரம் செய்து கொள்ளும் என் அழகு நிலையத்தில், என் வியாபாரத்திற்கு பாதகமாக தலையினை மறைத்து பணிக்கு வந்ததாலேயே இவரை பணி நீக்கம் செய்ததாக" த சன் இதழுக்கு அளித்த பேட்டியில் கடை உரிமையாளர் ஸாரா ஒப்புக் கொண்டுள்ளார்.


வேலை போன விரக்தியோடு வெளியேறிய புஷ்ரா நோவா, மனம் சோர்ந்து போய் உட்கார்ந்து விடாமல், துணிவுடன் நீதிமன்றத்தை அணுகி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.


இருவரையும் அழைத்து விசாரித்த இலண்டனில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கான நீதிமன்றம் (British employment tribunal panel) இறுதியில் புஷ்ரா நோவாவிற்கான வேலை பறி போனதற்காகவும் உணர்வுகள் புண்பட்டமைக்காகவும் நஷ்ட ஈடாக 4000 பிரிட்டிஷ் பவுண்ட்களை வழங்கியுள்ளது. அத்துடன் தலையினை மறைக்கும் ஒரு துணி ஒருவரின் பணியை எங்ஙனம் பாதிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


மேலும், மத ரீதியிலான பிரச்னையாக உருவெடுக்காமல் தவிர்க்க, தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வன்கொடுமையாகத் தான் இதனைக் கருத வேண்டும் என்று இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.


இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் இவ்வகைச் செயல்கள் பிரிட்டனில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதற்கும் இஸ்லாமியர்கள் அதனைத் துணிவோடு எதிர்கொண்டு சட்ட ரீதியிலான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர் என்பதற்கும் இத்தகைய நிகழ்வுகள் சான்றாக உள்ளன.


தொடர்புடைய சுட்டி:

ஆடைகளைக் களைவதா சுதந்திரம்?

http://islamicdress.blogspot.com/2005/10/blog-post.html

22 July 2008

பர்தா அணிந்த முஸ்லிம் பெண் குடியுரிமை வழங்க பிரான்ஸ் மறுப்பு


ஹிஜாப் அணிந்த காரணத்தினால், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கு குடியுரிமை வழங்க பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரி பாய்சா. இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். 2000ம் ஆண்டிலிருந்து பிரான்சில் வசித்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அனைத்தும், பிரான்ஸ் நாட்டிலேயே பிறந்தன. பிரெஞ்ச் மொழியிலும் பாய்சா நன்றாகப் பேசுவார். கடந்த 2005ம் ஆண்டில், இவர் பிரான்ஸ் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். ஆனால், பிரான்ஸ் நாட்டு கலாசாரத்துடன் இன்னும் ஒன்றுபடவில்லை எனக் கூறி, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவர் ஹிஜாப் (பர்தா) அணிவதாலும், இஸ்லாமிய மத நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றுவதாலும், அந்த நடைமுறைகள் ஆண், பெண் சமம் என்ற பிரான்ஸ் நாட்டின் அடிப்படையான கோட்பாடுகளுக்கு முரணாக இருப்பதாலும், பாய்சாவிற்கு குடியுரிமை வழங்க முடியாது என, பிரான்ஸ் அரசு மறுத்து விட்டது.

கருத்துச் சுதந்திரம் பற்றி பேசிக் களைத்துப் போய், இப்போது "தனிமனித சுதந்திரம்" வியாபாரத்தில் குதித்திருக்கும் ஃபிரான்ஸில் முஸ்லிம்கள் மூன்றாம் தர மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள் என்பது மீண்டுமொரு முறை உலகிற்கு முன் நிரூபணமாகியுள்ளது.

ஒரு பெண் தன் இஷ்டத்திற்கு ஆடைகளைக் களைந்து கொள்ள அனுமதிக்கும் அதே நாட்டில் ஒரு பெண் தன் விருப்பப்படி கண்ணியத்தைப் பேணும் ஒரு உடையினை அணிந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவது விசித்திரத்திலும் விசித்திரமாகும்.

தனது நாட்டில் கட்டிக் காக்கும் கலாச்சாரம்(?!) பறிபட்டுப் போய் விடுமோ என்ற கவலையில் எழும் இஸ்லாமோஃபோபியாவின் தாக்கம் ஃபிரான்ஸின் இந்த இரட்டை நிலையில் நன்கு தெளிவாகிறது.

நன்றி: மொராக்கோ டெய்லி

http://www.dailymail.co.uk/news/worldnews/article-1034412/Veiled-Muslim-woman-denied-French-citizenship-amid-concerns-radical-religious-views.html

15 July 2008

சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

ஹிஜாப் பெண்களைச் செயலிழக்கச் செய்கிறது, அவர்களது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது போன்ற அரதப் பழசான எதிர்மறைச் சிந்தனைகள் இத்தகைய செய்திகள் மூலம் தகர்த்தெறியப் படுகின்றன.


கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23) உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். இக்கல்லூரியில் Expression Profiling in Cancer துறையில் உயர்கல்வி பயில உள்ளார். (முழு விபரங்களை இங்கே காணலாம் : http://www.a-star.edu.sg/graduate_academy_and_scholarships/192-A-STAR-Graduate-Scholars)



திருமதி ஷகீலா, " ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology And Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றுள்ளார். இதன் மூலம், இறைவன் நாடினால் உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) முனைவர் (PhD) பட்டம் பெறுவார்.



தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. 'இளமையில் கல்' என்பதுதான் அவர் கணவர் முஹம்மத் இத்ரீஸின் அறிவுரை. இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார்.



"வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்!" என்பதே சகோதரி ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. "லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!" என்று உறுதியுடன் சகோதரி ஷகீலா கூறுகிறார்.



வாழ்வில் சிறக்க ஹிஜாப் ஒரு தடையில்லை என்ற கூற்றை மீண்டும் இங்கே நிரூபித்துள்ள இந்தச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!



சுட்டிகள்:

www.a-star.edu.sg

தமிழ்முரச

03 July 2008

ஆடையில் தான் உள்ளது நாகரிகம் - டாக்டர் டி. நாராயண ரெட்டி!

சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன்.

"விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம்..." சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.

இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.

'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.

ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'attention drawing behaviour'என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?

நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!

டாக்டர் டி. நாராயண ரெட்டி (ஆனந்த விகடனில்)

27 May 2008

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், "என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு மேலே உள்ள ஹிஜாபைக் கண்டு அல்ல!" - என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகள் பிரபலம்.
அந்த வாசகங்கள் எத்துணை உண்மையானவை என்பதை மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கச் செய்துள்ளனர் முஸ்லிம் சகோதரிகள்.


அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வாரி வழங்கிய வரலாற்றை மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கும் ஈரான், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னோடியாய் விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே!

அறிவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
அளிக்கும் தகவலின்படி ஈரானின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1994 - 2004 க்குள் பத்து மடங்கு உயர்ந்துள்ளது. மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான அதிகரித்துள்ளது.


இத்தகைய விழிப்புணர்ச்சியின் காரணமாக ஈரானிய சமுதாயம் சர்வதேச அளவில் சாதனைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண் பெண் என்ற பால் வேற்றுமையின்றி "அறிவைத்
தேடுதல்" எனும் அடிப்படை இங்கே நிருபணமாகிக் கொண்டுள்ளது.

ஆம்! கடந்த வாரத்தில் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் இந்தப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி ஈரானியப் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றுள்ளனர். விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில்
கலந்து கொண்டனர்.

* சகோதரி மெஹ்ராஜ் கோல்கின்ஃபர் எனும் முஸ்லிம் பெண், மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றுள்ளார். மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப்
பரிசை வென்றுள்ளது.

* சகோதரி சோனியா சப்ரீ அவர்களின் பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் "நானோ காம்ப்போஸைட்" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது.

* அதே சமயம் சகோதரி மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது.

ஈரானிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கூடுதல் தகவல்கள்:

பன்னாட்டு இயற்பியல் ஒன்றியத்தால் (The International Union of Pure and Applied Physics - IUPAP) இவ்வருடத்திய சிறந்த இளம் விஞ்ஞானியாக டாக்டர். யாஸமென் ஃபர்ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 34-ஆவது சர்வதேச உயர் ஆற்றல் பெளதீக மாநாட்டில் High Energy Physics
(ICHEP2008) இதற்கான சாதனை விருதினை இவர் பெறவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


சர்வதேச அளவில் 25 நாடுகளுடன் நடந்த போட்டியில் இரானின் முஸ்லிம் பெண்கள் சமர்ப்பித்தத் திட்டங்களில் வென்றவை பின்வருவாறு:

1. Mehrnaz Golchinfar: Power station without pollution for environment (Winner of the Special Jury Award)

2. Ladan Nakhaei, Saeideh Nooshzadeh and Naser Darijani: Laboratory washer device for washing non accessible points of the laboratory tools and devices.

3. Elena Horri, Mehrangiz Ebrahimi and Mohsen Horri: Washable polymer and elastic for x-ray absorption

4. Negar Mahmoodian: Automatic music stand

5. Marzieh Morselpour, Mohammad Ali jusefzadeh and Parvin Nejad Sarvari: Production of ointment and suppository of citrullus colocynthis extract to reduce blood sugar

6. Negar Molazadeh: Intelligent seat belt

7. Parvin Vasseghi, Anaheita Davoodi and Tahmasb Davoodi: Building energy management system (BEMS)

8. Soheila Kamrani and Saeed Naderian: Producing water color compounds special for use in water color painting technique on stone, as well as regular technique of water color prepared from pigments of fruits, herbal plants, food colors and powder paints

9. Sonya Saberi: (World Intellectual Property (WIPO) Award)

10. Fatemeh Soltanzadeh and Mojtaba Emamjome: The Optimization of Cement and Concrete with Usage of Oman Sea Chalky Conches

11. Samaneh Mollaghasemi, Mahtab Ahmadi and Mansoor Norooz Eidian: A device to relieve migraine pains.

12. Roghayeh Hashemi: Anti-Fertility effects of seed of cossypium herbaceum and ruta graveolens plants on adult male rats is regd

13. Hoda Jalali Nejad, Amir Jalali Nejad and Hamid Jalali Nejad: Recycling of polyethylene tare phthalate (PET) which used for water and soft drink

14. Maryam Eslami: An implement for reparation and surgery of osseous diseases in olecranon (nternational Federation of Inventors' Associations (IFIA) Award, also honored with the WIPO special emblem as the top laureate for her findings consistent with the treatment of bone and joint diseases at the 36th International Exhibition of Inventions held on April 2-6 2008,where she (photo to the right) won the first prize)

15. Mahnaz Saeedi Delcheh: Flat gelatins cover for shoes to attending high equilibrium and residence of foot ache

16. Zahra Sajjadi: Automatically system that change unpleasant air to pleasant air

17. Iman Kanani: Water Purifier/Softener

18. Sahar Sepehr: Robo School Police19. Maryam Noori: Robo traffic police20. Zeynab Abdolzahrai: Wireless Electric Skate Roller


அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அரசியல் ரீதியிலான உறவுகள் ஏதுமற்ற நிலையிலும், பல மேற்கத்திய நாடுகள் ஈரானின் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளுக்கான மென்பொருள் / வன்பொருள் வாங்க பொருளியல் சார்ந்த அனுமதிகளை வழங்க மறுக்கும் சூழ்நிலைகளிலும் ஈரானின் விஞ்ஞான உற்பத்தித் திறன் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான் அளிக்கும் தகவல்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்வோரில் 70% பெண்கள் ஆவர்.

இயற்பியல், கணிதம், மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் பல "முதன் முதலாய்" கண்டுபிடித்து சாதித்திருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுகள் இல்லாத காரணங்களினால் இவர்களது கண்டுபிடிப்புகள், இவர்களது ஆய்வுகளைப் பின்பற்றும் மேற்கத்தியர்கள் 'கண்டுபிடித்த'தாக
அறிவிக்கப் படுகிறது.

உலகின் முதல் "பேட்டரி" தொழில்நுட்பத்தில் துவங்கி காற்றாலை மூலம் கொண்டு ஆற்றலைப் பெறுவது வரை மட்டுமில்லாமல் அல்ஜீப்ரா, வேதியியல், புவி ஈர்ப்பு விசை, ஒளியின் வேகம் ஆகிய கண்டுபிடிப்புக்களை உலகிற்குத் தந்த ஈரான், பதிவேட்டில் தனது கண்டுபிடிப்பைப் பதிக்கத் தவறியதைக் காலம் கடந்து உணர்ந்துள்ளது.

காலம் கடந்து உணர்ந்தாலும், அதற்காகச் சோர்ந்து விடாமல் முயற்சி செய்து சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அரங்கில் தன்னை நிலை நிறுத்த ஈரான் முயன்று வருகிறது. நம்பிக்கை ஊட்டும் இத்தகைய விழிப்புணர்வுகள்தாம் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அவசியமான தேவைகளாகும்.

- அபூ ஸாலிஹா



http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=919&Itemid=278


மறுபதிப்பு: Nidur.info

14 April 2008

ஜெர்மனியில் முஸ்லிம் பெண்களுக்கான உடற்பயிற்சி மையம்!

உடலை இறுகப் பிடிக்கும் அரைகுறை ஆடைகள், அரைநிர்வாண கோலங்கள் ஏதுமில்லாத ஓர் உடற்பயிற்சி மையத்தை அதுவும் முஸ்லிம் பெண்களால் முஸ்லிம் பெண்களுக்காக நடத்தப்படும் ஓர் உடற்பயிற்சி மையத்தைக் கற்பனை செய்ய முடியுமா?

ஆம்! இது நிகழ்ந்திருப்பது வளைகுடா நாடுகளில் அல்ல. ஜெர்மனியின் கலோன் மாவட்டத்தின் எஹ்ரென்ஃபெல்டு நகரம் இதற்கு ஓர் முன்னுதாரணமாய் திகழ்கிறது. அந்நகரிலுள்ள முஸ்லிம் பெண்களின் கோரிக்கையினை மனதிற்கொண்டு ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்ட இந்த உடற்பயிற்சி மையம்
தனது ஓராண்டை இப்போது நிறைவு செய்துள்ள நிலையில் இதனை முன்மாதிரியாகக் கொண்டு ஆங்காங்கே துவங்கும் பிற உடற்பயிற்சி நிலையங்கள் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவீன கருவிகளையும் சர்வதேச தரத்தினையும் கொண்ட, முழுக்க முஸ்லிம்
பெண் பயிற்சியாளர்களையும் இஸ்லாமிய அடிப்படையிலான கண்ணிய
உடைக்கட்டுப்பாடுகளை அடிப்படை விதிமுறைகளாகவும் கொண்டு இயங்கும்
இம்மையத்தினுள் நேரம் தவறாமல் தொழ பள்ளிவாயிலும் உண்டு.

ஹயாத் உடற்பயிற்சி மையம்"ஹயாத்" (வாழ்க்கை) என்ற பெயர் கொண்ட இப்பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரி எமின் ஐடமிர் பேசுகையில் கடந்த ஏப்ரல் 2007 இல்
துவங்கப்பட்ட இந்த முஸ்லிம் பெண்களுக்கான உடற்பயிற்சி மையம்,
அப்பகுதி முஸ்லிம் பெண்களின் கோரிக்கையினை முன்வைத்து ஆரம்பத்தில் சிறு அளவில் துவங்கப்பட்டதாகக் கூறுகிறார்.

"முகம், கை, கால்களைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வலியுறுத்தும்
இஸ்லாத்தில் - ஒரு பெண் மற்ற பெண்ணைக் கூட அரைகுறை
நிர்வாணக்கோலத்தில் பார்ப்பதற்கு அனுமதி இல்லை எனும் போது, ஆண்கள்
பெண்கள் கலந்து உடற்பயிற்சி மையம் என்ற பெயரில் நடக்கும் ஆபாச,
அநாச்சாரங்களில் இருந்து விடுபடவே இது போன்ற முழுக்க முழுக்க
பெண்களுக்கான மையம் துவங்கும் எண்ணம் தோன்றியது" என்கிறார்.

350 பெண் வாடிக்கையாளர்களைக் கொண்டு பரபரப்பாக இயங்கி வரும்
இந்த மையத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைவிகளே. தங்கள்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உபயோகமாய் செலவிடுவோர் இதில் அதிகம். தவிர சிறு குழந்தைகளுக்கான விளையாட்டு அறை வசதியும் அதில் காப்பாளர் கண்காணிப்பும் இருப்பதால் சிறுவயது குழந்தைகளைக் கொண்ட முஸ்லிம் பெண்களும் இதில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். தங்கள் மனைவிகளை மையத்திற்குக் கொண்டு வந்து விட்டுச் செல்லும் கணவன்மார்களுக்குக்கூட இம்மையத்தினுள் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.

உடலை உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வலியுறுத்தும் இஸ்லாத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும், அதன்
அடிப்படையில் இஸ்லாம் விதித்துள்ள வரம்புகளை மீறாத வகையில் விதிமுறைகளை வகுத்துள்ள சகோதரி ஐடமிர், பெண்களுக்கான உடற்பயிற்சி மையம் என்ற பெயரில் அநாகரீக ஆபாச உடையணிந்து ஆண்/பெண்
பயிற்சியாளர்களைக் கொண்டு நடக்கும் ஜெர்மனியின் மற்ற பயிற்சி
மையங்களைக் கடுமையாகச் சாடவும் செய்கிறார்.

உடற்பயிற்சி செய்ய விரும்பும் முஸ்லிம் பெண்கள் இது போன்ற மற்ற உடற்பயிற்சி நிலையங்களில் ஏற்படும் உடைகள்/ ஆண் பயிற்சியாளர் போன்ற தர்ம சங்கடங்கள் மூலம் உடற்பயிற்சிகளையே தவிர்த்து விடுவதையும்
சுட்டிக்காட்டினார்.

பெண் விடுதலை பற்றிப் பேசும் பெண்கள் தம் அரைகுறை உடைகளினால் ஏற்படும் விபரீதங்களைத் தம் இயல்பு வாழ்க்கையில் இன்னல்களாக சந்திக்கும் போது மட்டுமே உணர்கின்றனர். ஆடையில் சுதந்திரம்
வேண்டும் எனும் பெண்களின் கோஷத்திற்கு உதவிக்குரல் கொடுக்கும்
ஆணினத்திற்கு அவர்களின் சபலமே அடிப்படைக் காரணம் என்பதையும் மிகத்
தாமதமாகப் புரிந்து கொள்கின்றனர். அந்த ரீதியில் ஜெர்மனி துவங்கி
அனைத்து மேலை நாடுகளிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும்
இணையதள ஊடகங்களில் பற்றி எரியும் தலையங்கமாக இன்று இச்செய்திகள்
வலம் வருகின்றன.

மேற்கத்திய நாடுகளின் இந்தக் கடும் வயிற்றுப் போக்கிற்குக்
காரணம் இல்லாமல் இல்லை. ஜெர்மனியின் உடற்பயிற்சி மையங்களுக்கு
அதிகாரப்பூர்வமான அனுமதி வழங்கும் அரசு சார் DSSV எனும் ஏற்புடைமை
மற்றும் ஆரோக்கியம் (fitness and spa-industry) தொடர்பான
நிறுவனத்தின் அதிகாரியான ரெஃபிட் காம்பெரோவிக் பேசுகையில், 'ஹயாத்'
உடற்பயிற்சி மையத்தின் வெற்றியினைத் தொடர்ந்து எட்டு கோடியே இருபது
இலட்சம் பேர் கொண்ட ஜெர்மனியின் பல நகரங்களில் இத்தகைய முஸ்லிம்
பெண்களுக்கான உடற்பயிற்சி நிறுவனங்கள் துவங்குவதற்கான அறிகுறிகள்
தென்பட ஆரம்பித்துள்ளது" எனக் கூறுகிறார்.

பாஸ்டன் உடற்பயிற்சி மையம்ஹயாத்
உடற்பயிற்சி நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாஸ்டனின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் வளாகத்தினுள் அமைந்த மாணவர்களுக்கான
உடற்பயிற்சி மையம் கடந்த பிப்ரவரி-4, 2008 முதல் முஸ்லிம்
மாணவிகளுக்கான தனி நேரத்தினை ஒதுக்கியுள்ளது (MSNBC செய்தி). பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவிகளின் ஒருமித்த வேண்டுகோளுக்குச் செவி சாய்த்திருக்கும் இச்செய்தி பலரை மலைக்க வைத்துள்ளது. காழ்ப்புணர்ச்சியை முதலீடாகக் கொண்டு இயங்கும் சில செய்தி நிறுவனங்கள், "தங்கள் பத்திரிகையாளர் செய்தி சேகரிக்கச் செல்கையில் உடற்பயிற்சி நிறுவனத்தில் யாரும் இல்லை" என்று எழுதி தங்கள் அடிமன வெறுப்பைக் காட்டிக்கொண்டன.

நெறிமுறையற்ற வாழ்வினால் தறிகெட்டு ஓடி குடும்பப் பிணைப்பு சீர்குலைந்தபின் சிந்திக்க ஆரம்பிக்கும் மேற்கத்தியர்களிடையே
இஸ்லாத்தின் தாக்கமும், அதன் சீரிய வாழ்க்கைமுறையும் பெரும்
வரவேற்பைப் பெற்று வரும் இக்கால கட்டத்தில், இத்தகைய மையங்கள்
துவங்குவது மேற்கத்தியக் கலாச்சாரத்தினை மாற்றிமைக்கும் என்பதால்
அரசு துவங்கி பல்வேறு அமைப்புகளிடையே இப்பயிற்சி மையங்களுக்கு
எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அத்தகைய அனைத்து எதிர்ப்புகளையும் மீறி
"ஹயாத்" போன்ற இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த மையங்கள் பரவுவது
தெளிவாக தெரியும் சூழலில் இது போன்ற இஸ்லாமிய உடற்பயிற்சி மையங்கள் அமைப்பது பற்றி தமிழக முஸ்லிம்களும் சிந்திக்கத் துவங்குவது நலம்.

- அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

மறுபதிப்பு: http://arsultan-enangudi.blogspot.com/2008/05/blog-post.html