ஹிஜாபுக்குத் தடை விதிக்கிறது மும்பை மகளிர் கல்லூரி!
மத்திய மும்பையின் மாதுங்கா பகுதியில் உள்ள மானிபென் ஷா பெண்கள் கல்லூரியில் ஹிஜாபுடன் கல்லூரிக்கு வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்க இன்று முதல் (01-10-2008) அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப் பட்டுள்ளது.
மகளிர் கல்லூரியான மானிபென் ஷாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பயின்று வரும் சூழலில் இந்த உத்தரவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களாக ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்வி பயில்வதை அனுமதித்த இக்கல்லூரி நிர்வாகத்தினை நோக்கி மக்களிடம் இருந்து கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு விடையளிக்கும் முகமாக "ஹிஜாப் அணிந்து சில விஷமிகள் சென்றவாரம் கல்லூரிக்குள் நுழைந்ததாகவும், மாணவிகளின் பாதுகாப்பை முன்னிட்டு ஹிஜாப் தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டதாகவும்" கல்லூரி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
கல்லூரியின் முதல்வர் சுமன் ஜெயின் அவர்களின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று பெற்றோர்கள் ஒருமுகமாகத் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பொதுமக்களில் சிலர் கருத்துக் கூறுகையில் "உடல் பாகங்களை மூடி மறைக்க அணியும் ஹிஜாப், முகத்தினையும் சேர்த்து மறைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை வலியுறுத்தவில்லை. ஹிஜாப் உடையினை அணியும் ஒரு பெண் முகத்தினைத் திறந்து கல்லூரிக்கு வந்தால் விஷமிகள் வந்தார்கள் என்ற பேச்சிற்கே இடமில்லையே? எனவே கல்லூரி நிர்வாகம் மீண்டும் ஹிஜாப் தடையுத்தரவை நீக்கி, முகம் தெரியும்படியாக உடையணியும்படி உத்தரவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஹிஜாபினைத் தடுக்கும் உள்நோக்கத்தில் விஷமிகள் ஹிஜாப் அணிந்து வருவதாக கதையளக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும் என்று பரவலாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment